Monday, 17 October 2011

கலப்பு திருமணத்தை காந்தி ஏன் ஆதரிக்கவில்லை? - பெரியார்




தத்துவங்கள் / பெரியாரியல்
 "படித்த ஹரிஜனப் பெண்ணைக் கல்வி கற்ற ஜாதி  ஹிந்துவுக்குத் திருமணம் செய்து  வைப்பதென்றால், படித்த ஹரிஜனப் பெண்  கிடைப்பது எளிதல்லவாதலால், கல்வி கற்ற  ஹரிஜன வாலிபர்களுக்குக் கல்வி கற்ற ஜாதி  ஹிந்துப் பெண்களை நீங்கள் ஏன் மணஞ் செய்து  வைக்கக்கூடாது?" என்று காந்தியிடம் கேட்ட  பொழுது...
 காந்தி சொல்கிறார்: 
" இம்மாதிரிக் கலப்பு மணஞ்செய்து  கொள்ளுபவர்கள் ஹரிஜன சேவையிலேயே  ஈடுபட வேண்டும்... சிறந்த நோக்கத்துடன்    செய்யப்படும் மணமும் கருதிய பலனைத் தராமல்  போகலாம்... சாதாரணமாக எந்தச் சீர்திருத்தமும்  நத்தையின் வேகத்திலேயே முன்னேறும்.  இவ்வாறு மெதுவாக முன்னேறுவதைக் கண்டு  அதிருப்திப்படுவது சீர்திருத்தங்களின் இரகசியத்தை  அறியவில்லை என்பதையே காட்டும்.... என்  இஷ்டத்தைக் கூறுவதானால் ஜாதி  ஹிந்துகளாயுள்ள பெண்கள் எல்லோருமே  ஹரிஜனர்களையே மணந்து கொள்ள வேண்டும்  என்று கூறுவேன்... வெகுநாட்களாக  வேருன்றியுள்ள தப்பபிப்ராயங்களை ஒழிப்பது  கஷ்டமான காரியமாகும். அவற்றைப் பார்த்துச் 
பொறுமையினால் வெல்ல வேண்டும்."

 காந்தியின் விளக்கம் புரிகிறதா? சற்று சுத்தி  வளைத்து பேசும் குழப்பமான பதில் தான். ஆனால்  கலப்பு திருமணத்தை ஆதரிக்கவில்லை என்பதை  நம்மால் உணரமுடிகிறது. 

 பெரியாரிடம் காந்தியார் கருத்தை குறித்து கேட்ட  பொழுது...

 *"கலப்பு மணத்தைப் பற்றி ´வழ வழா´ என்று  எழுதுகிறாரே தவிர, ஆயிரக்கணக்கான  ஆண்டுகளாய் இருந்துவரும் கொடுமையை ஒரே  சட்டத்தினால் மண்டையிலடித்து ஒழிக்க வேண்டும்  என்று ஏன் தைரியமாகக் கூறக்கூடாது? பல  நாட்களாகவே வேருன்றி விட்ட கொடுமைகளைக்  கண்டு சிரிக்கக் கூடாது என்றும், பொறுமையினால்  தான் வெல்ல வேண்டும் என்றும் கூறுவது வைதீக  ஹிந்துக்கள் முதுகில் தட்டிக் கொடுப்பதற்காகத் தானே? "எந்தச் சீர்திருத்தமும் நத்தையின் வேகத்தில் முன்னேற வேண்டும்? என்று கூறுவது எதற்காக? உடன் கட்டை ஏறுதல் என்ற தீயபழக்கமானது அறிவாளி ஒருவர் நினைத்த மாத்திரத்திலேயே ஒழிந்து போகவில்லையா?" 2,000-ஆண்டுகளாக உள்ள ஒரு அக்கிரமத்தை நத்தை வேகத்தில் தான் மாற்றவேண்டும் என்றால், 150-ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஆட்சி முறையை மட்டும் மான் வேகத்தில் மாற்ற வேண்டிய அவசியமென்ன? ´தீண்டாமை மெள்ளமெள்ளத் தான் ஒழியும்´ என்றால், வெள்ளைக்காரன் மட்டும் இந்த விநாடியிலேயே மூட்டையைக் கட்ட வேண்டிய அவசியமென்ன? -
 *[பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம். ´விடுதலை´, 09.07.1946]
என்று கேட்கிறார் பெரியார்.

*"தோழர் காந்தியார் தீண்டாமை விஷயத்தில் அக்கறை கொண்டிருக்கும் உட்கருத்தைப் பொது மக்கள் அறிந்திருக்கிறார்கள். ஆணிவேர் அறுபட்டு ஆட்டம் கண்டிருக்கும் பிராமண மதமாகிய ஹிந்து மதத்தைத் தாங்கி, நிறுத்தி வைத்து கீழே விழுந்து விடாமல் காப்பாற்ற வேண்டுமென்பதற்காகவே தான் தாழ்த்தப்பட்ட சமூகங்களின் துணையைத் தேடுகிறாரே தவிர, உண்மையாகவே அவர்களை உயர்த்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்தினாலேயே அல்ல. உண்மையில் தீண்டாமையை ஒழிக்க வேண்டுமென்றால், முதலாவது அவர்களுக்கு "ஹரிஜனம்" என்ற ஹிந்துமதப் பெயரைப் புதியதாக அவர்கள் தலைமையில் சூட்டியிருக்கவே மாட்டார். "பங்கி" என்ற பெயர் தமக்கு மிகவும் பிடித்திருப்பதாக இப்போது கூறும் தோழர் காந்தியார், தாழ்த்தப்பட்டவர்களுக்கு இச்சமயம் இருந்துவரும் பலவிதமான பெயர்கள் சிறிது காலத்திற்கு அப்படியே இருந்துதான் தொலையட்டுமே என விட்டிருக்கக் கூடாதா?" 
-[பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம். ´விடுதலை´, 09.07.1946]
என்றும் காந்தியின் சாதிப்பற்று குறித்து கேள்வியெழுப்புகிறார் பெரியார்.

"காந்தியின் தத்துப்பித்து தத்துவம்" தான் என்ன?

"தென் ஆப்பிரிக்கா இந்தியர்களுடைய விடுதலைக்காக சத்தியாக்கிரகம் செய்யப்போனாலும் போவேன்" என்று கூறும் இவர், தீண்டப்படாதவரின் விடுதலைக்காக சத்தியாக்கிரகம் செய்யக் கூடாதா" என்றொரு கேள்வியும் கேட்கிறார் பெரியார். 

*"ஒரே பேச்சில் சீர்திருத்தமும் பேசியதுபோல் இருக்க வேண்டும்; அதே சமயத்தில் வைதிகரின் மனதையும் புண்படுத்தக் கூடாது என்ற வெண்டைக்காய்த் தத்துவம் இந்நாட்டில் எந்தப் பயனையும் அளிக்க முடியாது. அரசியல், பொருளாதாரம், சமூதாயம் ஆகிய எல்லாத் துறைகளிலும் வைதிகம் புகுந்து கொண்டு, ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது, இந்நாட்டில். வெட்டு ஒன்று, துண்டு இரண்டாக இருந்தாலொழிய, இனி எவ்விதமான நன்மைகளையும் சாதிக்க முடியாது."

என்று கூறும் பெரியாரின் கேள்விக்கு பதில்தான் என்ன?

காந்தியின் மீது எந்த விமர்சனத்தையும் வைக்க அனுமதிக்கப்பட்டாத காலங்கள் அவை.  

1946-இல் காந்தி மீது வைக்கப்பட்ட விமர்சனம் பெரும்பான்மையான ஊடகங்களில் மறைக்கப்பட்டுக் கொண்டே வந்தது. மாறாக காந்தியாருக்கு ´மகாத்மா´ பட்டம் கொடுக்கப்பட்டு அமர்க்களமான விளம்பரங்களுடன் உலா வந்துக் கொண்டிருந்தார். 

சமுதாயப்புரட்சி குறித்து எந்த அக்கறையும் இல்லாத காந்தியார் தென் ஆப்பிரிக்க இந்தியர்களுடைய இழிவை குறித்து பேசும் யோக்கியதை இருக்கிறதா? 

கலப்பு மணம் குறித்த கேள்விக்கு காந்தியாரின் பதில் இந்த யோக்கியதையில் இருந்த போது, ´மலம் அள்ளும் தொழிலாளர்கள்´ குறித்து பேசும் போது, "அதைப் புனிதத் தொழிலாக அந்த தொழிலாளர்கள் கருத வேண்டும்" என்ற கருத்து மேலும் பெரியாருக்கு காந்தி மீது இருந்த மரியாதையை தூக்கியெறிய வைத்தது.

*தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் கலப்பு மணஞ்செய்து கொள்பவர்களுக்குச் சிறப்பான உதவிகளைச் செய்வதன் மூலம் தீண்டாமையைப் பூண்டோடு அழித்துவிடலாம்." 

ஏன் அப்படி செய்ய தயங்குகிறார்கள் என்கிறார் பெரியார்.

*ஜாதியைக் குறிக்கும் பட்டங்கள் சட்ட விரோதமாக்கப்பட வேண்டும். குளம், தெரு, கோவில், விடுதி - எதிலாவது தீண்டாமையை வற்புறுத்துபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் எனச் சட்டம் இயற்ற வேண்டும். ஜாதிப் பட்டம் வைத்திருப்பவர்களுக்குக் கல்வி, உத்தியோகம் எதுவும் கிடையாது என்று சட்டமியற்ற வேண்டும். கலப்பு மணம் செய்து கொள்பவர்களுக்கு மட்டும் சிறந்த சலுகைகள் காட்டப்படும் எனக் கூறி, ஜாதி வேற்றுமையை ஒழிக்கலாம். கிராமாந்திரங்களில் அக்கிரகாரங்களிலும் மற்ற "மேல் ஜாதி"க்காரர் எனப்படுபவர்களும் குடியிருக்கும் பக்கத்திலேயே தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் சர்க்கார் செலவிலேயே வீடுகள் அமைத்துக் கொடுக்கலாம். ´சேரிகள்´ என்பவற்றை அடியோடு எடுத்துவிட்டு, அவற்றைக் கிராமங்களுடன் கலந்து விடலாம்.

இப்படி பல திட்டங்கள் சட்டங்கள் மூலம் செய்து ஏன் சாதியை தீண்டாமையை ஒழிக்கக்கூடாது என்கிறார் பெரியார். 

ஆனால் காந்தியின் வேறு பல திட்டங்களின் அறிவிப்புகள் சாதியை வளர்ப்பதாக அமைந்தது. அதில் ´வருணாசிரமம் காப்பாற்றப்பட வேண்டும்´ என்ற காந்தியின் பேச்சும் ஒன்று. 

1957-இல் காந்தி மீது பெரியார் தீவிரமான எதிர்ப்புகளை தெரிவிக்க ஆரம்பித்தார். 
காந்திப் படத்தை எரிப்பது, காந்தி சிலையை அகற்றுவது, காந்தியை எதிர்த்து அறிக்கை விடுவதுமாக தமிழ்நாட்டில் தொடர்ச்சியான கிளர்ச்சிகளை நடத்தினார். 
தமிழ்நாட்டில் இருந்த காங்கிரஸ் காந்தி ஆதரவாளர்கள் பெரியாருக்கு கண்டனம் தெரிவித்தனர். 
அவர்களிடம் காந்தியைக் குறித்து கேள்வியெழுப்புகிறார் பெரியார்:
*"எரித்தால், அகற்றினால் சும்மா இருக்க மாட்டோம்" என்று கூறும் அன்பர்களே! 
நாம் எரிப்பதாக, அகற்றுவதாகக் கூறும் காந்தி எப்படிப்பட்டவர்? அவர் யாருடைய அடிமை? 
அவர் யாருக்கு ஆகப் பாடுபட்டவர்?
"அவரால் ஏற்பட்ட சுயராஜ்ஜியம் (விடுதலை)" என்பது என்ன?
அதனால் நாம் அடைந்தது நலனா? கேடா?
சாதிமுறை (வர்ண தர்மம்) ஒழிய வேண்டுமா? வேண்டாமா?
சுயராஜ்ஜியத்தில் சாதி ஒழிக்கப்படாமல் இருக்கும்படியான கேட்டைச் செய்தவர் யார்? 
இவைகளை நல்லபடி சிந்தித்துப் பார்த்துவிட்டு, பிறகு இரத்த ஆறு ஓடச் செய்யுங்கள்.
மற்றும் சாதியை ஒழிக்க இதைத் தவிர வேறு வழி இருந்தால் அதை வெளியிடுங்கள்! எல்லோரும் சேர்ந்து பாடுபடலாம்!

காந்தி பேச்சும் எழுத்தும்
1. "வருணாசிரம தர்மத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு."
2. "வருணாசிரம தர்மத்தைக் காப்பாற்றவே சுயராஜ்ஜியம் கேட்கிறேன்."
3. "சாதி முறை (வருண தர்மம்)" அலட்சியப்படுத்தப்பட்டதாலேயே அன்னிய ஆட்சி ஏற்பட்டது."
4. "சாதி முறை (வருணதர்மம்) என்பது பிறப்பை ஆதாரமாகக் கொண்டதே ஆகும்."
5. "சாதிமுறை - வருண தர்மம் என்பது மக்களை நாலு சாதியாகப் பிரித்து ஒவ்வொரு சாதிக்கும் இன்ன தொழில் என்று பிரிக்கப்பட்டிருப்பதே ஆகும்." 
6. "சாதி முறையைக் (வருணதர்மத்தைக்) காப்பாற்றுவது (சீர்திருத்துவது) என்பது அந்தந்த சாதியானை அவனவனுக்கு ஏற்பட்ட அந்தந்தத் தொழிலைச் செய்யும்படி ஏற்பாடு செய்வதே ஆகும்."
7. "அந்த ஏற்பாடு அந்தந்த சாதியான் அந்தந்த சாதித் தொழிலைச் செய்யும்படியாகச் செய்வது தான் சுயராஜ்ஜியமாகும்."
8. "இராம இராஜ்ஜியம் என்பது இந்தத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதேயாகும்."
இதை காந்தி கூறியிருக்கிறார்.
இதை யாராவது மறக்கிறீர்களா?
*காந்தியை பற்றி பெரியார் ஈ.வெ.ரா. அறிக்கை: [´விடுதலை´, 01.10.1957]

வரலாறு முழுவதும் தெரிந்தவர்களுக்கு காந்தியின் வில்லத்தனம் தெரிந்தும் ஆதிக்கவாதிகளின் கைக்கூலிகளாக இருந்து காந்திக்கு ´மகாத்மா´ பட்டம் கொடுக்கப்பட்டு இன்றும் காந்தியை தாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
அதுசரி, இன்றைய இளைஞர்களிடம் காந்தி "காதல் திருமணம் கூடாது", "கலப்பு மணம் கூடாது" என்று கூறி இருந்தால் காந்தி என்னவாகி இருப்பார்? \

நன்றி

தமிழச்சி
28.05.2010

No comments:

Post a Comment